திராவிட அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது: பொன்.ராதாகிருஷ்ணன்
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், திராவிட அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், திராவிட அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்திய நாட்டில் வாக்குரிமை உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம்; எவரும் அரசியல் கட்சி தொடங்கலாம். கமல்ஹாசன் 40 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றிவிட்டு இப்போது தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், பினராயி விஜயன் உள்ளிட்டோரை கமல்ஹாசன் சந்தித்தைப் பார்க்கும்போது, அகில இந்திய அரசியலில் ஈடுபடுவாரா என்பது அவர் கூறும்போது தெரியவரும். பொதுவாக, திராவிட பாணி அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறுவது இனிவரும் காலத்தில் எடுபடாது. நாம் எல்லாரும் திராவிடர்கள்தான்.
கன்னியாகுமரியில் புதிய துறைமுகம் அமைக்க சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சென்னையில் துறைமுகம் வந்தபோதும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால், அங்கு இப்போதும் மீன்பிடித் தொழில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
எனவே, எந்தத் திட்டத்தை எங்கு தொடங்கினாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தைத்தான் செயல்படுத்துவோம். மக்களுக்கு எதிரான திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம்.
தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினேன். சாதகமான பதில் கூறியுள்ளார். சில இடங்களில் சாலைப் பணி நடப்பதால் அது முடிந்ததும் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார் என்றார் அவர்.
பாஜக மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாநில வர்த்தக அணித் தலைவர் ஏ.என். ராஜக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. செந்தில்வேல், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார், நகரத் தலைவர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், உள்ளாட்சிப் பிரிவுச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.