முகப்பு
தூத்துக்குடி

இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:34 AM
பகிர்:

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து முறையாக அனுமதி பெறாமல், தடையை மீறி தங்கு கடலுக்குச் சென்ற 37 விசைப் படகுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.  இது தொடர்பாக சென்னையில் இருந்து வரும் மீன்வளத்துறை அதிகாரி விசாரணை நடத்த உள்ளார்.  இதுபோல் நாட்டுப்படகு மீனவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு,  ஒட்டப்பிடாரம் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மூலம் அனுமதி பெறாமல் 58 இடங்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. 
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் எந்த பாதிப்பும் இல்லை.  மழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. 
 இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களின் குடும்பத்தினர் அளித்துள்ள மனு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 
எனவே, மீனவர்கள் விடுதலைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
 தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம்,  திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு ரூ.1000- மதிப்பிலான காதொலி கருவியையும்,  மகளிர் திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான கோலப் போட்டியில் வெற்றி பெற்ற 3 மகளிர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களையும், தூத்துக்குடி வேலைவாய்ப்பு உதவி திட்டத்தின் கீழ், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலையிழந்த 2 பேருக்கு தனியார் ஆலையில் பணி நியமன கடிதத்தையும் ஆட்சியர் வழங்கினார்.
 மேலும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பரதநாட்டியப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் பயின்ற கலைஞர் நா. முத்துச்செல்வம் தனக்கு கிடைத்த 4 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் ரூ.25,000-க்கான காசோலை ஆகியவற்றை ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.