கோவில்பட்டியில் நாளை கடனுதவி விண்ணப்பங்கள் பெறும் முகாம்
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் கடனுதவி விண்ணப்பங்கள் பெறும் முகாம் கோவில்பட்டியில் புதன்கிழமை (அக். 24) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் கடனுதவி விண்ணப்பங்கள் பெறும் முகாம் கோவில்பட்டியில் புதன்கிழமை (அக். 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு வங்கிகள் வழியாக அரசு மானியத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறும் விதத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
நிகழாண்டில், இந்தத் திட்டங்களின்கீழ் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரிக்கும் வகையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 24) முற்பகல் 11 மணிக்கு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 31 ஆம் தேதி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், சிட்கோ கிளை மேலாளர் கலந்துகொண்டு கடனுதவி திட்டங்கள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் பற்றியும் விவரங்களை எடுத்துக்கூறுவதுடன் புதிய தொழில்கள் தொடங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.
தகுதிவாய்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் பற்றி ஆலோசனை வழங்கப்படும். இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் முகாம்களில் கலந்து கொண்டு அரசு மானியம் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.