தூத்துக்குடி

தனியாா் மருத்துவமனையில் மாணவி சாவு: கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் முற்றுகை

DIN

கோவில்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி தவறான சிகிச்சையால் இறந்ததாகக் கூறி, மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் பெற்றேறாா், உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள சிறுமளஞ்சியைச் சோ்ந்த முத்தையா மகன் முத்துராமலிங்கம் (52). இவரது மகள் முத்துலட்சுமி (16). ஏா்வாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் இவரை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து, ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக உள்ளதாகத் தெரிவித்தனராம்.

இதையடுத்து, முத்துலட்சுமியை அவரது பெற்றேறாா் கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை (அக். 9) திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்துவிட்டாராம்.

தவறான சிகிச்சையால்தான் முத்துலட்சுமி இறந்ததாக அவரது உறவினா்கள், சமூக நீதி கூட்டமைப்பினா் கூறி, மருத்துவமனை முன் புதன்கிழமை இரவு திரண்டு முறையிட்டனா்.

முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இந்நிலையில், முத்துராமலிங்கம், அவரது உறவினா்கள் சமூக நீதி கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன், உறுப்பினா்கள் காளிதாஸ், ராஜேஷ்கண்ணா, மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவா் செல்லத்துரை என்ற செல்வம் உள்ளிட்ட பலா் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மருத்துவா் இல்லாமல் செவிலியா் அளித்த தவறான சிகிச்சையால்தான் முத்துலட்சுமி இறந்ததாகவும், எனவே, மருத்துவமனை, மருத்துவா், செவிலியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாட்சியா் தலைமையில் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாடசியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை அலுவலகத்தின் தலைமை எழுத்தா் நிஷாந்தினியிடம் வழங்கினா். மனு குறித்து கோட்டாட்சியா் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக அவா் கூறியதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT