தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் தொடர் கொலைகள்! காவல் துறையின் நடவடிக்கை என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்துவரும் கொலைச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சமான

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்துவரும் கொலைச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சமான நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 தொழில் நகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னைகளுக்கு பஞ்சமில்லாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள் சில மாதங்களில் மீண்டுவந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மீண்டும் பதற்றமடைந்தது.
 அந்தப் பிரச்னை தற்போது ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் நடக்கும் தொடர் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, நகைப்பறிப்பு சம்பவங்களும் தொடர்ந்து ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.
 மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 76 கொலைச் சம்பவங்களும், 2016 இல் 64, 2017 இல் 67, 2018 இல் 60, நிகழாண்டில் இதுவரை 54 கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் நடந்துள்ள 11 கொலைச் சம்பவங்கள் மக்களை பீதியடையச் செய்துள்ளது. 
இவற்றில், பழிக்குப்பழியாக நடந்த கொலைச் சம்பவங்கள் மட்டுமின்றி சிறிய வாக்குவாதத்தால் ஏற்பட்ட கொலை என்பது மக்கள் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 15 ஆம் தேதி நடந்த இரட்டை கொலை சம்பவமும், 16 ஆம் தேதி லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டதும் சிறிய வாக்குவாதத்தின் போது நடந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
 மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தாலும், நடவடிக்கை இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், பழைய குற்றவாளிகள் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன் கூறியது:
பழிக்குப்பழியாக கொலை என்பது மாவட்டத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், தற்போது சின்னசின்னப் பிரச்னைகளுக்குக்கூட கொலை செய்யும் அளவுக்கு இளைஞர்களின் மனநிலையை உருவாக்க போதை வஸ்துகள் மட்டுமே காரணமாக உள்ளன.
 கஞ்சா போன்ற போதை வஸ்துகளின் நடமாட்டம் மாவட்டத்தில் பெருகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோர் 19 முதல் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர். 
அவர்களின் போதைப் பழக்கமே கொலை செய்யத் தூண்டுகிறது. அதைத் தடுக்க காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தொடர் கொலைகளுக்கான மூல காரணங்கள், போதை வஸ்துகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பதே மாவட்டத்தில் இனியும் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடக்காமல் தடுக்க காரணமாக அமையும். 
எனவே, காவல் துறை இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
 இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கூறியது: கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்கிறோம். கடந்த 2 மாதங்களில் 10 கொலை வழக்குகளில் 19 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம். பழைய குற்றவாளிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 போதை தடுப்பு குற்றத்தில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  
நிகழாண்டில், 119 வழக்குகளில் 160 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 கொலைச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில், காவல் துறை மூலம் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். மாவட்டத்தில் எந்த இடத்தில் குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் 100 அவசர அழைப்புக்கு தகவல் தெரிவித்தால் காவல் துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மைக்காலமாக நடந்துவரும் கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டோரின் சராசரி வயது 20 என்பதால், இந்த விவகாரத்தில் காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி, இளைஞர்கள் பாதை மாறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


கடுமையான நடவடிக்கை: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
 கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சாதி ரீதியான கொலைகளை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT