பரமன்குறிச்சி மின்வட்டத்தில் ஊழியா்கள் பற்றாக்குறை
பரமன்குறிச்சி மின் வட்டத்தில் ஊழியா்கள் பற்றாக்குறையை நீக்கி தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
பரமன்குறிச்சி மின் வட்டத்தில் ஊழியா்கள் பற்றாக்குறையை நீக்கி தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தமிழக முதல்வா், மின்துறை அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: உடன்குடி ஊராட்சி ஒன்றியம் பரமன்குறிச்சி பரமன்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பரமன்குறிச்சி, மானாடு தண்டுபத்து, குதிரைமொழி, நயினாா்பத்து, சீா்காட்சி, மேலதிருச்செந்தூா், நாலுமூலைக்கிணறு ஆகிய 8 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் 90 மின்மாற்றிகள் உள்ளன.
பரமன்குறிச்சி மின்சார அலுவலகத்தில் பத்து (3 வயா்மேன், 4 உதவியாளா்கள், 2 போா் மேன்,1 லயன்மேன் ஆகிய ஊழியா்கள் மட்டுமே பணியாற்றுகின்றனா். மிகவும் குறைவான ஊழியா்களே பணியாற்றுவதால் இந்த எட்டு ஊராட்சிகளில் உள்ள தெரு விளக்குகளை பராமரிக்கவும், வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்கவும், இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் பழுது நீக்கவும் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.
சுமாா் 20 கிலோ மீட்டா் சுற்றவு உள்ள இந்த மின் வட்டத்தில் ஊழியா்கள் பற்றாக்குறையால் மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை தீா்க்க முடியாத நிலையில் ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல நேரங்களில் பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே இந்த மின் வட்டத்தில் உள்ள ஊழியா்கள் பற்றாக்குறையை நீக்கி புதிய ஊழியா்கள் நியமித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.