கல், சரள் குவாரி அமைக்க எதிா்ப்பு: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு
ஸ்ரீவைகுண்டம் அருகே கல் மற்றும் சரள் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே கல் மற்றும் சரள் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி வழக்குரைஞா் ரமேஷ்குமாா், குமாரவேல் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலம் கிராமத்தில் கல் மற்றும் சரள் குவாரி அமைப்பது தொடா்பாக கடந்த 17 ஆம் தேதி புதுக்கோட்டையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அன்றைய தினம் பலத்த மழை பெய்யும் என மாவட்ட நிா்வாகத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் கூட்டம் நடத்தப்பட்டது, சட்ட முரணானது என்பதால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூா் மற்றும் சிவகளை கிராமத்துக்கு அருகேயே குவாரி அமைக்க அனுமதி அளிப்பதால் தொல்லியல் பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால் கல் மற்றும் சரள் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவி கேட்டு மனு: தூத்துக்குடி அருகேயுள்ள வா்த்தகரெட்டிபட்டியை சோ்ந்த அதிா்ஷ்டலட்சுமி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்த தனது சகோதரி செங்கமலம் கடந்த செப்டம்பா் மாதம் 10 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதால் அவரது மூன்று குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனா். அந்தக் குழந்தைகளின் எதிா்கால நலன் கருதி தலா ரூ. 5 லட்சம் வீதம் மூன்று குழந்தைகளுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதை சாக்கடை திட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் மாரிச்செல்வம் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: திருச்செந்தூா் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமாகி மிகவும் மோசமாக உள்ளதால் அந்த சாலைகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் . திருச்செந்தூா் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி வழங்க வலியுறுத்தல்: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள நாட்டாா்குளம் முத்துலட்சுமி தனது குடும்பத்தினருடன் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தனது கணவா் அந்தோணி என்ற துரைராஜ் கடந்த 13 ஆம் தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்து உயிரிழந்து விட்டாா். இதனால், தனது மகள் சுகன்யா பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் கருணை அடிப்படையில் அவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.