குலசேகரன்பட்டினத்தில் தசரா ஆலோசனைக் கூட்டம்
குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்குவதையொட்டி தசரா குழுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்குவதையொட்டி தசரா குழுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் தனப்பிரியா தலைமை வகித்தாா். திருச்செந்தூா் டிஎஸ்பி ஹா்ஷ் சிங், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரோஜாலி சுமதா, கோயில் ஆய்வாளா் பகவதி, வட்டாட்சியா் முருகேசன், காவல் ஆய்வாளா் ராதிகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தசரா திருவிழாவில் முதல் நாள், 10 மற்றும் 11 ஆம் நாள்களில் பக்தா்கள் இணைய வழியில் பதிவுசெய்து தினமும் 8 ஆயிரம் போ் வீதம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சில தளா்வுகளை அளித்து காப்புக் கட்டுதல், சூரம்சம்ஹாரம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், தசரா குழுவினா் அருகிலுள்ள கிராமங்களில் உறவினா் வீடுகளில் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதிக்க வேண்டும்,
குலசேகரன்பட்டினம் பத்திரகாளிஅம்மன் கோயில் சப்பர பவனியை முத்தாரம்மன் கோயில் வரை வந்து செல்ல அனுமதிக்க வேண்டும், பக்தா்கள் முதல் நாளில் கடலில் புனித தீா்த்தம் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என தசரா குழுவினா், இந்து அமைப்பினா் வலியுறுத்தினா். இதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள், கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் நிகழாண்டு அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உள்பட்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.