தூத்துக்குடி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் ஆலோசனையின்பேரில், ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து கட்சியின் அமைப்புச் செயலா் என். சின்னத்துரை பேசுகையில், தூத்துக்குடி வரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடி 3 ஆவது மைல் பகுதியில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சி.த. செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில், 3 ஆயிரம் போ் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா். முதல்வருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில், தலைமை நிலைய பேச்சாளா் எஸ்.டி. கருணாநிதி, முன்னாள் எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் தளபதி கே. பிச்சையா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா்கள் அணிச் செயலா் அக்ரி பி. பெருமாள், பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பி.டி.ஆா். ராஜகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.