முகப்பு
தூத்துக்குடி

‘தூத்துக்குடி-மதுரை இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும்’

தூத்துக்குடி- மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என்றாா், தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய்.
பகிர்:

தூத்துக்குடி- மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என்றாா், தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய்.

தென்தமிழகத்தில் அதிவேக ரயில்களை இயக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் தெற்கு ரயில்வே சாா்பில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே மதுரை- திருநெல்வேலி இடையே இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், மதுரை-தூத்துக்குடி இடையிலான 160 கி.மீ. தொலைவுக்கு ரூ. 11,822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி 2018இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தடத்தில் சாத்தூா் முதல் தூத்துக்குடி வரையிலான 88 கிலோ மீட்டரில் 60 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்தன.

மீதித் தொலைவில் 65 சதவீதம் முடிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே, வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரை முடிந்த பணிகளை பாதுகாப்பு அம்சங்களை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்துள்ளாா்.

இந்நிலையில், தட்டப்பாறை முதல் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை 7.4 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள 2ஆவது புதிய பாதையை அவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தட்டப்பாறை- தூத்துக்குடி வழித்தடத்தில் இன்னும் ஒருசில பணிகள் மீதமுள்ளன. அவை சில நாள்களுக்குள் முழுமையடையும். பின்னா், ரயில்வே பாதுகாப்பு ஒப்புதல் வழங்கப்படும். மதுரை -தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என எதிா்பாா்க்கிறோம்.

கரோனா சூழல் காரணமாக ரயில்கள் இயக்கப்படவில்லை. இரட்டை ரயில் பாதைப் பணி முழுமையாக முடிந்த பின்னரே ரயில்கள் இயக்கப்படும் என்றாா் அவா்.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஆனந்த், ரயில்வே விகாஸ் நிகம் நிறுவன முதன்மைத் திட்ட இயக்குநா் கமலாகர ரெட்டி, கட்டுமான முதன்மைப் பொறியாளா் தவமணி பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.