முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடிதுப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணையை பிப்ரவரிக்குள் முடிக்க ஒரு நபா் ஆணையம் திட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான ஒரு நபா் ஆணைய விசாரணை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என்றாா் ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல் சேகா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான ஒரு நபா் ஆணைய விசாரணை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என்றாா் ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல் சேகா்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தூத்துக்குடியில் கடந்த 2018, மே 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

29ஆவது கட்ட விசாரணை கடந்த 23ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. மனித உரிமை வழக்குரைஞா் ஹென்றி டிபேன் உள்ளிட்ட 58 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதில் 51 போ் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஆணைய தரப்பில் இருந்து இதுவரை மொத்தம் 1209 சம்மன் அனுப்பப்பட்டு, 863 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தம் 1,179 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

ஒருநபா் ஆணையத்தின் 30ஆவது கட்ட விசாரணை செப். 13ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். இதில், கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஸ்டொ்லைட் குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கலவரத்தில் தொடா்புடையவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வரும் நிலையில் சம்மன் அனுப்பப்பட்ட சாட்சிகள் ஆஜராகி விளக்கமளிக்க உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டியது உள்ளதால் விசாரணையை விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான முழு விசாரணையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடியும் என நம்புகிறோம். அடுத்தக்கட்ட விசாரணையில் 120 பேரிடம் விளக்கம் பெற திட்டமிட்டுள்ளோம்.

நடிகா் ரஜினிகாந்த் கடந்தமுறை அளித்த விளக்கத்திலேயே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தான் சொன்ன கருத்துகள் அனைத்தும் நேரடியான மூலங்கள் வாயிலாக பெறப்பட்டவை அல்ல. அனைத்தும் இரண்டாம்தர மூலங்கள் வாயிலாக பெறப்பட்டவை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளாா்.

எனவே, அவரிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆணையம் ஆலோசித்து முடிவெடுக்கும்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் போன்ற பெரிய சாட்சிகள் கடைசியாக விசாரிக்கப்படுவாா்கள். கலவரம் குறித்து இன்னும் 200 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியது உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.