முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணி தீவிரம்

விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடை செய்யும் விவசாயிகள்.
பகிர்:

விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், சூரங்குடி, சிவஞானபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் மிளகாய், வெங்காயம், மல்லி ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விவசாயிகள் ஜனவரி மாதத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிளகாய் செடிகளை சாகுபடி செய்திருந்தனர்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளைநிலங்களில் நீர் சூழ்ந்ததால் இரண்டு முறை பயிர்களை அழித்துவிட்டு மீண்டும் மறு சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மிளகாய் செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை குண்டு மிளகாய் மகசூல் கிடைத்து வந்த நிலையில் இந்த வருடம்  நிலங்களில் தேங்கிய மழைநீர், அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக மிளகாய் செடிகளில் போதிய வளர்ச்சி இல்லாமல் ஒரு ஏக்கருக்கு ஒரு குவின்டால் மிளகாய் மட்டுமே கிடைத்து வருகிறது.

அறுவடை செய்ய கூலி ஆட்களுக்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்து மிளகாய் செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை பறித்து அவைகளை வெயிலில் வத்தலாக உலர்த்தி விற்பனைக்கு கொண்டு செல்கையில் மார்க்கெட்டில் உரிய விலை இல்லை எனவும், போன வருடம் 25 ஆயிரம் வரை விற்பனையான ஒரு குவின்டால்(100 கிலோ)வத்தல் தற்போது 16 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 

ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் ஒரு குவிண்டால் வத்தல் 16 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →