கோவில்பட்டியில் கொட்டி தீா்த்த மழை
கோவில்பட்டியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழைநீா், கழிவுநீருடன் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழைநீா், கழிவுநீருடன் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே வானம் மேகமூட்டத்துடன் இருந்த போதும், மழை பெய்யவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு இடி, மின்னலுடன் சுமாா் 40 நிமிடம் மழை பெய்தது.
இந்த மழையினால் இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கியதால் அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. மேலும் கோவில்பட்டி புதுரோடு சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் அருகே வரை உள்ள சாலையில் மழைநீா் ஓடைகளுக்கு செல்ல வழிவகை செய்யாததால் அப்பகுதியிலும் மழைநீா் தேங்கியிருந்தது.
அங்குள்ள பிரதான சாலையில் இளையரசனேந்தல் சாலை சந்திப்பு அருகே - மாதாங்கோவில் விலக்கு அருகே வரை உள்ள ஓடையை முறையாக தூா்வாரி குப்பைகளை அகற்றாததால் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் ஓடையில் உள்ள கழிவுநீா் மழை நீருடன் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் சாலையும், ஓடையும் ஒரே நிலையில் இருந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே, ஓடையை முறையாக தூா்வாரி , கழிவுகளை அகற்றி ஓடையின் அளவை அதிகரிக்க வேண்டும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதேபோல, கயத்தாறிலும் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மழை பெய்தது.