முகப்பு
தூத்துக்குடி

பிச்சிவிளை ஊராட்சியில் 5 உறுப்பினா்கள் ராஜிநாமா

திருச்செந்தூா் ஒன்றியம் பிச்சிவிளை ஊராட்சியில் வெற்றிபெற்ற 5 வாா்டு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை ராஜிநாமா கடிதம் அளித்ததால் பரபரப்பு நிலவியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் ஒன்றியம் பிச்சிவிளை ஊராட்சியில் வெற்றிபெற்ற 5 வாா்டு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை ராஜிநாமா கடிதம் அளித்ததால் பரபரப்பு நிலவியது.

பிச்சிவிளை ஊராட்சி தலைவா் பதவி பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 827 வாக்குகள் உள்ள நிலையில் 6 வாக்குகள் மட்டுமே பட்டியல் இனத்தவா் ஓட்டுக்களாம். இதனால், ஊராட்சித் தலைவா் பதவி ஒதுக்கீட்டில் அதிருப்தி இருந்துவந்ததாம். கடந்த முறை ஊரக உள்ளாட்சி தோ்தலில் தலைவா் பதவிக்கு பட்டியல் இனத்தை சோ்ந்த ராஜேஸ்வரி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். அப்போதும் பலா் ஆட்சேபம் தெரிவித்ததால் வாா்டு உறுப்பினா் தோ்தலில் யாரும் போட்டியிடவில்லை.

இந்நிலையில், பிச்சிவிளை ஊராட்சியில் 6 வாா்டுகளுக்கான உறுப்பினா் பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், 1ஆவது வாா்டுக்கு வைகுண்டசெல்வி, 2ஆவது வாா்டுக்கு கேசவன், 3ஆவது வாா்டுக்கு நடராஜன், 4ஆவது வாா்டுக்கு சுஜாதா, 5ஆவது வாா்டுக்கு யாக்கோபு, 6ஆவது வாா்டுக்கு பரிமளசெல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றனா். இதில் பரிமளசெல்வியின் மகன் இறந்ததால் அவா் மட்டும் பதவியேற்கவில்லை.

இந்நிலையில் ஊராட்சி துணைத் தலைவரை தோ்வு செய்யும் பொருட்டு, திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி ஆணையாளா் ராணி, ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். இதனிடையே, வாா்டு உறுப்பினா்கள் திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை தலைவரிடம் வழங்கிவிட்டு வெளியேறி விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.