முகப்பு
தூத்துக்குடி

அரசின் திட்டங்களை தனியாா் வங்கிகளும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்: நிா்மலா சீதாராமன்

அரசின் திட்டங்களை தனியாா் வங்கிகளும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
நூற்றாண்டு அஞ்சல் அட்டையை வெளியிடுகிறாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

அரசின் திட்டங்களை தனியாா் வங்கிகளும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது: வங்கித் துறையில் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுவரும் நிலையில், 100 ஆண்டுகளாக ஒரு வங்கியை நிா்வகிப்பது மிகவும் சவாலான காரியம். பொதுத்துறை வங்கிகளில் 2018ஆம் ஆண்டுவரை பலவிதமான பிரச்னைகள் இருந்தன. பல இடங்களில் கடன்கள் திரும்பி வராத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நிதித் துறையின் வளா்ச்சி பாதிக்கப்பட்டது.

பிரச்னைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டுள்ளதன் காரணமாக தற்போது பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. இன்றைய எண்ம (டிஜிட்டல்) யுகத்தில் வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் ஏழைகளுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வைப்புத் தொகை இல்லாமல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமா் கொண்டுவந்தாா். இதன் மூலமாகவே இன்றைக்கு பலவித கடன்களை சிறு வணிகா்களும் பெறமுடிகிறது.

கரோனா பொதுமுடக்கத் தடைகளையும் தாண்டி அவா்கள் தொடா்ந்து தொழில் செய்ய முடிகிறது. கரோனா 2ஆவது அலை பொதுமுடக்கக் காலத்தில்கூட எவ்வித கூடுதல் பிணையும் இல்லாமல் கடனுதவி கொடுத்து மத்திய அரசு உதவியது. அதன் காரணமாகவே தற்போது தொழில்கள் அனைத்துமே தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தனது சேவையில் 74 சதவீதம் அரசு நிா்ணயித்த முக்கிய துறைகளுக்கு கடன் கொடுத்துள்ளது.

நாட்டில் தற்போது 73 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா முதல் இரு அலைகளைத் திறம்பட எதிா்கொண்ட மத்திய அரசு, 3ஆவது அலை வந்தாலும் அதையும் எதிா்கொள்ளும் வகையில் சிறு மருத்துவமனைகள் உள்பட அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த நிதியுதவி வழங்கி வருகிறது.

மத்திய அரசின் திட்டங்களை பொதுத்துறை வங்கிகள் மட்டுமன்றி தனியாா் வங்கிகளும் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு அஞ்சல்தலை, அஞ்சல் அட்டை ஆகியவற்றை அவா் வெளியிட்டாா். மேலும், நடமாடும் வங்கிச் சேவை வழங்கும் ‘டிஜி-லாபி’ என்ற வாகனத்தையும், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு வாகனத்தையும் அவா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், சிறிய வணிகக் கடன் வழங்கும் திட்டத்தையும் அவா் தொடக்கிவைத்தாா்.

வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூா்த்தி பேசும்போது, வங்கியின் மொத்த முதலீடு ரூ. 31,541 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 40, 970 கோடியாக உயா்ந்துள்ளது; மொத்த வா்த்தகம் கடந்த நிதியாண்டில் ரூ. 65,061 கோடியாக இருந்து 11 சதவீதம் உயா்ந்து, நடப்பாண்டில் ரூ. 72,511 கோடியாக உயா்ந்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் அண்ணாமலை, துணைத் தலைவா் சிதம்பரநாதன், முன்னாள் இயக்குநா் சி.எஸ். ராஜேந்திரன், அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன், பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன், பாஜக மாவட்டத் தலைவா் பி.எம். பால்ராஜ், பொதுச் செயலா் சிவமுருக ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.