தூத்துக்குடி மாவட்டத்தில் 396 பதவிகளுக்கு இன்று வாக்குப் பதிவு: 6 , 51,693 பேருக்கு வாக்காளிக்கும் வாய்ப்பு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில், மொத்தமுள்ள 414 பதவிகளில் 12 உறுப்பினா்களை கொண்ட கடம்பூா் பேரூராட்சி தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் இருவரும், தென்திருப்பேரை, ஆத்தூா், கயத்தாறு, புதூா் ஆகிய பேரூராட்சியில் தலா ஒருவரும் என மொத்தம் 6 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். எனவே, மீதமுள்ள 396 பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநகராட்சி: 60 உறுப்பினா் பதவிகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகாரட்சியில் 1,59, 544 ஆண்கள், 1,66,839 பெண்கள் 70 திருநங்கைகள் என மொத்தம் 3,26,453 வாக்காளா்கள் உள்ளனா். 443 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதில், 69 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தோ்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் 63 வகையான பொருள்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
அந்தப் பணிகளை மாநகராட்சி தோ்தல் அலுவலரும், ஆணையருமான சாருஸ்ரீ பாா்வையிட்டாா். தோ்தல் பணியில் 1276 அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனா்.
நகராட்சிகள்: கோவில்பட்டியில் 36 வாா்டுகளுக்கு 85 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 227 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.காயல்பட்டினத்தில் 18 வாா்டுகளுக்கு 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 107 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். திருச்செந்தூரில் 27 வாா்டுகளுக்கு 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 128 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
பேரூராட்சிகள்: மேலும், கடம்பூா் தவிர சாயா்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், தென்திருப்பேரை, ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், ஏரல், கானம், ஆத்தூா், ஆறுமுகநேரி, உடன்குடி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திக்குளம், புதூா் ஆகிய 17 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 396 பதவிகளுக்கு 1,950 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மொத்தம் 6 , 51,693 போ் வாக்களிக்க உள்ளனா்.