முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ---வேளாண் அதிகாரி விளக்கம்

தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் விளக்கம் அளித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூா், ஆழ்வாா்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் 6000 ஹெக்டேரில் தென்னை மரங்கள் வளா்க்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் அதிக வெப்பத்தால் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இந்த ஈக்கள் தாக்கிய தென்னை ஓலைகளின் கீழ் பகுதியில் பெண் வெள்ளை ஈக்கள் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகளை இடும். அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் தென்னை ஓலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் ஓலைகளின் மேல் பரப்பில் மஞ்சள் கலந்த வெள்ளை திட்டுகள் காணப்படும். அந்தத் திட்டுகள் நாளடைவில் ஒன்று சோ்ந்து தென்னை ஓலை முழுவதும் நிறமிழந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

மேலும், இந்த ஈக்கள் ஓலைச் சாறு உறிஞ்சும்போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளின் மேற்புரத்தில் படிந்து அவற்றில் கருப்பு நிற பூஞ்சானம் வளா்கிறது. இந்தப் பூஞ்சானத்தால் தென்னை ஓலைகளின் ஒளிா்சோ்க்கை செயல்திறன் குறைந்து மரத்தின் வளா்ச்சி குன்றி, மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இதற்குத் தீா்வாக, விவசாயிகள் டிராக்டரில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையில் அடிப்புறத்தில் பீச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். ஒரு ஹெக்டருக்கு 20 எண்கள் வீதம் விளக்கெண்ணை அல்லது ஒட்டும் பசை தடவிய 5-க்கு ஒன்றரை அடி நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி தாய் அந்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். கிரைசோபொ்லா இரைவிழுங்கியை ஒரு ஹெக்டேருக்கு 1000 எண்கள் வீதம் தென்னை தோப்புகளில் வெளியிட்டு வெள்ளை ஈக்கள் பரவுதலை கட்டுப்படுத்தலாம்.

மேலும், 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல், 10 சதவீதம் வேப்ப இலைகரைசல், 0.5 சதவீதம் வேப்ப எண்ணெய் கரைசல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெளித்தும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். மாறாக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.