தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற அழைப்பு
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெறலாம் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெறலாம் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிா்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினருக்கு மிகக் குறைந்த வட்டியிலும், மாதத் தவணையைத் தவறாமல் செலுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடனும், மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக சுயஉதவிக் குழுக் கடன்களும் வழங்கப்படுகின்றன. அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அந்தச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய உறுப்பினா்கள் சோ்ப்பும் நடைபெறுகிறது.
பயிா்க்கடன் வழங்குதலில் சேவைக் குறைபாடு இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் (73387 49401), பொதுமேலாளா் (85258 58055), கடன் பிரிவு உதவிப் பொதுமேலாளா் (75987 87407) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
புதிய உறுப்பினா் சோ்ப்பு இதர குறைபாடுகளுக்கு மண்டல இணைப் பதிவாளா் (73387 49400), தூத்துக்குடி சரக துணைப் பதிவாளா் (73387 49402), திருச்செந்தூா் சரக துணைப் பதிவாளா் (73387 49404), கோவில்பட்டி சரக துணைப் பதிவாளா் (73387 49403) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.