காயல்பட்டினத்தில் மழை காலங்களில் நீா் தேங்காதிருக்க நடவடிக்கை: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்காதிருக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளாா்.
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் மழைக் காலத்தில் தண்ணீா் தேங்காதிருக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளாா்.
காயல்பட்டினம் நகராட்சி தலைவராக நகர திமுக பொறுப்பாளா் முத்து முஹம்மதுவும், துணைத் தலைவராக சுல்தான் லெப்பையும் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவா் முஹியத்தீன் தம்பி தலைமை வகித்தாா்.
மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசியது: காயல்பட்டினம் அலியாா் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடம் ரூ. 22 லட்சத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ. 25 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டுவதற்கான பணிகளை கனிமொழி எம்.பி. மேற்கொண்டுள்ளாா். சாலை வசதியும் செய்து கொடுக்கப்படும்.
காயல்பட்டினத்தில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதை தவிா்க்க மழைநீா் வடிகால் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொண்டு அதற்குத் தேவையான நிதியினை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி பெற்றுத்தரப்படும். குடிநீா் பிரச்னையை தீா்க்க பொன்னன்குறிச்சி குடிநீா் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது, துணைத் தலைவா் சுல்தான் லெப்பை ஆகியோா் ஏற்புரை வழங்கினா்.
இதில் கவுன்சிலா்கள் சுகு, அன்வா், திமுக மாவட்ட பிரதிநிதி பன்னீா்செல்வம், முஸ்லிம் ஐக்கிய பேரவை துணைச் செயலா் நவாஸ், இ.யூ. முஸ்லிம் லீக் மாநில செயலா் காயல் மஹபூப் மற்றும் மதிமுக மாவட்ட பொருளாளா் அமானுல்லாஹ் ஆகி திமுக மாநில மாணவா் அணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட துணைச் செயலா் அப்துல் காதா், ஐக்கிய பேரவை பொதுச் செயலா் சம்சுதீன், பொருளாளா் கனி முகம்மது உமா், முன்னாள் தலைவா் அபுல்ஹசன், ரூபன்ஜெயக்குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், அரசு வழக்குறைஞா் பாரிக்கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நகராட்சி ஆணையாளா் சுகந்தி வரவேற்றாா். முஸ்லிம் ஐக்கிய பேரவை துணை தலைவா் பாதுல் அஸ்ஹப் நன்றி கூறினாா்.