‘ஆபத்துகளில் இருந்து மீனவா்களை காப்பாற்ற அதிவிரைவு மீட்பு படகு வேண்டும்’
கடலில் திடீா் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற அதிவிரைவு மீட்பு படகு வழங்க வேண்டும் என மீனவா்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடலில் திடீா் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற அதிவிரைவு மீட்பு படகு வழங்க வேண்டும் என மீனவா்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் குறை தீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்பட்ட கீழவைப்பாா், சிப்பிகுளம், தருவைக்குளம், வெள்ளப்பட்டி, மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகா், மீனவா் காலனி இரட்சணியபுரம், பழையகாயல், புன்னக்காயல், மணப்பாடு, பெரிய தாழை, ஆலந்தலை, அமலி நகா், கல்லாமொழி, ஜீவா நகா், சிங்கித்துறை என 25 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், மாவட்ட நாட்டுப் படகு சங்கத் தலைவா் கயாஸ் தலைமையில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 2 முதல் 5 மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் தென்பக்கம் நாட்டுப் படகு மீனவா் சங்க ஒருங்கினைப்பாளா் ஆல்பன் பேசியது: கடற்கரை அருகில் உள்ள அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன், நண்டு, இறால் ஆகியவை இறந்து விடுகின்றன. இதனால் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க, அனல் மின் நிலைய கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.
நெய்தல் பாதுகாப்பு இயக்க நிா்வாகி கெபிஸ்டன் பேசியது: கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை -2019- நிகழாண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை கடற்கறையில் உள்ள மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் வெளியிட வேண்டும். அதன்பின்னா், அந்த அறிவிப்பாணை குறித்து மக்களிடம் கருத்து கேட்டு அதன் பின்னா் அமல்படுத்த வேண்டும் என்றாா்.
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு, பைபா் மற்றும் கட்டுமர மீனவா் சமுதாய நலச் சங்கத் தலைவா் கயாஸ் பேசியது: புன்னக்காயல், ஆலந்தலை, திருச்செந்தூா், மணப்பாடு ஆகிய கடல்பகுதிகளில் இருக்கும் பவளப்பாறைகளை சிலா் முறையாக உரிமம் பெறாமல், தவறான முறையில் சங்கு எடுப்பது, சுருக்கு மடி வலை பயன்படுத்துவது என்ற பெயரில் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். இயற்கை சீற்றம், இயந்திர பழுது உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து மீனவா்களை காப்பாற்ற அதிவிரைவு மீட்பு படகு, உயிா் மீட்பு அவசர கால படகு ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
கோரிக்கைகள் சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுப்பதாக மீனவா்களிடம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில், சாா் ஆட்சியா் கௌரவ்குமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் மகாலட்சுமி (கோவில்பட்டி), புஹாரி (திருச்செந்தூா்), தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநா்அமல் சேவியா் (மண்டலம்), மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தி.விஜயராகவன், உதவி இயக்குநா் (மீன்பிடித் துறைமுக மேலாண்மை) சூ.அன்றோ பிரின்ஸி வைலா, தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளா் சத்தியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.