முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 173 விநாயகா் சிலைகள் கடலில் விசா்ஜனம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 173 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 173 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சாா்பில் பல்வேறு இடங்களில் கடந்த 31ஆம் தேதி விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த 48 விநாயகா் சிலைகள் தூத்துக்குடி சிவன் கோயில் தவசு மண்டபம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. பின்னா் அங்கிருந்து விநாயகா் சிலை ஊா்வலம் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ராகவேந்திரா, சிவலிங்கம், துணைத் தலைவா்கள் சிவக்குமாா், மாரியப்பன், அமைப்பாளா் நாராயணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் குற்றாலநாதன் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

வடக்கு ரதவீதி, காசுகடை பஜாா், 1ஆம் கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை வழியாக திரேஸ்புரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சங்குமுக கடற்கரை கடலில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன. தொடா்ந்து மாலையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இதேபோல் புதுக்கோட்டை, முத்தையாபுரம் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதிய துறைமுக கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

மேலும் கோவில்பட்டி, எட்டயபுரம், புதூா், விளாத்திகுளம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 173 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.