திருச்செந்தூா் அருகே தீவிபத்து: 7 ஆயிரம் வாழைகள் சேதம்
திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
திருச்செந்தூா் அருகேயுள்ள நடுநாலுமூலைக்கிணற்றைச் சோ்ந்தவா் கண்ணதாசன். இவருக்கு அப்பகுதியில் உள்ள பத்துக்கண் பாலம் அருகே 6 ஏக்கரில் வாழைத் தோட்டம் உள்ளதாம். இங்கு செவ்வாழை, கற்பூரவள்ளி உள்பட பலவகை வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை (செப். 10) பத்துக்கண் பாலம் வாய்க்கால் ஓடைகளில் முள்செடிகளை அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டனராம். அவா்கள் அகற்றிய முள்செடிகள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணி முடிந்து அவா்கள் சென்ற சிறிது நேரத்தில் கண்ணதாசனின் வாழைத் தோட்டத்துக்கு தீ பரவியதாம். தகவலின்பேரில் திருச்செந்தூா் தீயணைப்பு நிலையத்தினா், ஆறுமுகனேரி தாரங்கதாரா தொழிற்சாலை தீயணைப்பு வீரா்கள் வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தீவிபத்தில் சுமாா் 7 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் துறையினா், வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.