புதுமணத்தம்பதி கொலை வழக்கு: பெண்ணின் தந்தையிடம் போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தையை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தையை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரி செல்வம்(24). இவரும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவும் (20) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாம். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்துகொண்டனராம். அதன் பின்னர் புதுமணத் தம்பதி இருவரும் முருகேசன் நகரில் உள்ள மாரிசெல்வம் வீட்டிற்கு வியாழக்கிழமை காலையில் வந்துள்ளனர்.
மாரிச்செல்வத்தின் தாயும், தந்தையும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், புதுமணத்தம்பதி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில், அன்றையதினம் மாலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், மாரிச்செல்வம் வீட்டுக்குள் புகுந்து அவரையும், கார்த்திகாவையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீஸார், அவர்களது சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனர்.
மாவட்ட எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன், ஊரக டிஎஸ்பி சுரேஷ், நகர டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் குடும்பத்தினர் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் உடற்கூராய்வு முடிந்த நிலையில், இரு வீட்டாரின் உறவினர்களும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் குவிந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை 3 தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். திருமணம் முடிந்து 3 நாள்களில் புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.