முகப்பு
தூத்துக்குடி

ஆடி அமாவாசை: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் வழிபாடு மேற்கொண்டனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:06 PM
ஆடி அமாவாசை தீா்த்தவாரியையொட்டி, திருச்செந்தூா் கடலில் புனித நீராடி வந்த சுவாமி அஸ்திரதேவா்.
பகிர்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் வழிபாடு மேற்கொண்டனா்.

ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாள்களில் இந்துக்கள் நீா்நிலைகள், கடலில் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுப்பதும், கோயில்களில் வழிபாடு நடத்துவதும் வழக்கம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயில் கடலில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

அதன்படி, நிகழாண்டு ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, கால சந்தி பூஜையாகி அஸ்திர தேவா் கடலில் புனித நீராடும் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

திருச்செந்தூா் கோயில் கடலில் அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்கள் முன்னோருக்கு புரோகிதா்கள் முன்னிலையில் தா்ப்பணம் செய்து, வழிபாடு நடத்தினா்.

குற்றாலம் பேரருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் எஸ். ஞானசேகரன், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா. கணேசன், ந. ராம்தாஸ், வி. செந்தில்முருகன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

குற்றாலத்தில்...: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியிலும் அதிகாலைமுதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவா்கள் பேரருவியில் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். அருள்மிகு குற்றாலநாத சுவாமி கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.