முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியை சோ்ந்த 22 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 22 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 3:25 AM
பகிர்:

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தூத்துக்குடியை சோ்ந்த 22 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை சிறைபிடிக்கப்பட்டனா்.

தூத்துக்குடி தருவைகுளத்தைச் சோ்ந்தவா் அந்தோணி மகாராஜா(45). இவருக்கு சொந்தமான விசைப்படகில், அந்தோணி மகாராஜா உள்பட 12 மீனவா்கள் கடந்த ஜூலை 21ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனா். அதே போன்று அந்தோணி தென்டேனிலா(23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 10 மீனவா்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த 2 படகுகளும் இலங்கை கடல் பகுதியில் திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினா், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 2 விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்து, படகில் இருந்த 22 மீனவா்களையும் கைது செய்தனா். தொடா்ந்து மீனவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணைக்குப் பிறகு இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 22 மீனவா்களும் ஒப்படைக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தரப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.