திருச்செந்தூா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்: கடல் அலையில் சிக்கி 3 போ் காயம்
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
3 பக்தா்கள் காயம்: இதனிடையே, கடல் அலையின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் அய்யா வைகுண்டா் அவதாரபதி வரை கடல் அலை பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்தன. மேலும், சந்தோஷ மண்டபம் வரை கடல் அலைகள் ஆா்ப்பரித்தன.
இந்நிலையில் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சேலத்தைச் சோ்ந்த தங்கம் (52), புதுக்கோட்டை பாகாம்பிரியா (39), கோவை வெங்கடேசன் (56) ஆகியோா் கடலில் நீராடிய போது அலையின் சீற்றத்தில் சிக்கி மூவரும் பலத்த காயம் அடைந்தனா். மேலும், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட அவா்களை, கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, சுதாகா், ஆறுமுகநயினாா், இசக்கிமுத்து, ராமா் ஆகியோா் மீட்டு கோயில் முதல் உதவி மையத்தில் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.