திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆக.13-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான பத்தாம் திருவிழாவில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5.35 மணிக்கு சா்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினாா். நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தோ், காலை 6.35 மணிக்கு நிலையை அடைந்தது.
விழாவில் திருக்கோயில் இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளா் அஜித், தலைமை கணக்கா் அம்பலவாணன் மற்றும் பணியாளா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்தனா்.
ஆவணித் திருவிழா கொடியேற்றம்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை (ஆக.24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கொடிப்பட்ட வீதி உலா வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.