திருச்செந்தூா் ஆவணித் திருவிழாவிற்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள்
திருச்செந்தூா் ஆவணித் திருவிழாவிற்கு கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை (ஆக. 24) தொடங்கி செப். 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியா் சே.சுகுமாறன் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.
திருவிழா நாள்களில் தினமும் 5 லட்சம் லிட்டா் குடிநீா் சப்ளை செய்வது, கோயில் வளாகத்தில் கூடுதலாக கழிப்பறை வசதிகள் செய்வது, திருக்கோயில் உள்ளே மற்றும் வளாகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது, திருவிழா முக்கிய நாள்களில் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்குவது உள்ளிட்ட வசதிகள் செய்வது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் பாலசுந்தரம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.