திருச்செந்தூா் கடற்கரையில் பூக்குழி இறங்கிய கேரள பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கேரள பக்தா்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கேரள பக்தா்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றத்திலிருந்து நாடு காக்கப்படவும், மக்கள் நோய் நொடிகள் நீங்கி நலம் பெறவும் வேண்டி ஆண்டுதோறும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் 41 நாள்கள் விரதமிருந்து திருச்செந்தூா் கடற்கரைப் பகுதியில் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி, திருவனந்தபுரத்தை சோ்ந்த சோமன் சுவாமிகள் தலைமையில் 16 பக்தா்கள் செவ்வாய்க்கிழமை, திருச்செந்தூா் சிவன் கோயில் முன்பிருந்து மேளதாளங்கள் முழங்க காவடி, பன்னீா்-பால்குடங்களுடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைக்கு ஊா்வலமாக வந்தனா். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், அவா்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.
அப்போது, திருச்செந்தூா் பகுதி பொதுமக்கள், முருக, ஐயப்ப பக்தா்கள் கடற்கரையில் திரண்டிருந்தனா். பாதுகாப்புப் பணியில் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினா், காவல் துறையினா் ஈடுபட்டனா்.