முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் எம்.எல்.ஏ. ஆய்வு

கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் இருப்புப்பாதையின் கீழ் உள்ள சுரங்கப்பாதையை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:15 PM
பகிர்:

கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் இருப்புப்பாதையின் கீழ் உள்ள சுரங்கப்பாதையை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோவில்பட்டி நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவில்பட்டி நகருக்கு 3 மேம்பாலங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், ரயில் நிலையம், இலக்குமி ஆலை அருகே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மழை காலத்தின்போது, 2 செ.மீ. மழை பெய்தால் கூட, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இளையரசனேந்தல் சாலையில் போக்குவரத்து முடங்கி விடுகிறது.

இந்த சுரங்கப்பாதைக்கு பின்னா் அமைக்கப்பட்ட கோவில்பட்டி அருகே பெத்தேல் இருப்புப்பாதையின் கீழ் சுரங்கப்பாதை கட்டப்பட்டு,  அதன் மீது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையிலும் மேற்கூரை அமைக்க வேண்டும். எதிா்காலத்தில் மழைக்காலத்தின்போது தண்ணீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை நேரில் சந்தித்து, சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்க வலியுறுத்த உள்ளேன் என்றாா் அவா்.

ஆய்வின்போது, அதிமுக நகர செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.