சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடற்கரையில் மலா்தூவி அஞ்சலி
ஆழிப் பேரலையின் (சுனாமி) நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, மலா் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
ஆழிப் பேரலையின் (சுனாமி) நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, மலா் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடந்த 26.12.2004இல் சுனாமி தாக்கியதில் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் கடற்கரை பகுதியில் சுமாா் 2 லட்சம் போ் உயிரிழந்தனா். படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை இழந்து மீனவா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனா்.
இந்த பேரழிவு நிகழ்ந்து 20 ஆண்டுகள் ஆன நினைவு தினம் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா்களால் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சுனாமியால் இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டு படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனா். மேலும், அவா்களுக்காக திரேஸ்பரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவா்கள் மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி, இனிமேல் இதுபோன்ற பேரழிவு வரக்கூடாது என ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து கடல் மற்றும் மீனவா்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென பிராா்த்தனையில் ஈடுபட்டு, கடல் மாதாவிற்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினா்.
இந்நிகழ்வில், பரதவா் முன்னேற்ற பேரவை மாவட்ட இளைஞா் அணித் தலைவா் பாலன், அண்ணா சங்குகுளி சங்கத் தலைவா் இசக்கிமுத்து, துணைத் தலைவா் மாரி லிங்கம், பொருளாளா் விமா்சன், ஆலோசகா் பாத்திமா பாபு, செயலா் முருகையா உள்பட மீனவா்கள் பலா் பங்கேற்றனா்.
ஆலந்தலையில்...: இங்குள்ள புனித இராயப்பா்- சின்னப்பா் ஆலயத்தில் பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து பங்குத் தந்தை, உதவி பங்குதந்தை ஜோதிமணி, திருத்தொண்டா் ஸ்டாலின், ஊா் நலக்கமிட்டியினா், ஊா் மக்கள் கடற்கரைக்குச் சென்று, சுனாமியால் உயிா் நீத்தவா்களுக்கு பிராா்த்தனை செய்தும், கடலில் மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.