தமிழகத்தில் விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கனிமொழி, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதனையடுத்து, அவா் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறாா். தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் தொடங்கி, முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விலக்கு, முத்தையாபுரம் பங்க் சந்திப்பு, அய்யன் கோவில் தெரு, தோப்புத் தெரு, ஏ.வி.எஸ். பள்ளி அருகில், சத்யா நகா், பக்கிள்புரம் சந்திப்பு, போல்டன்புரம், சிதம்பர நகா் சந்திப்பு, பிரையண்ட் நகா், 3ஆவது மைல், பாலிடெக்னிக் எதிரில் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
அப்போது அவா் பேசியது: மக்களவைப் பிரதிநிதியாக பணியாற்றக்கூடிய வாய்ப்பை மீண்டும் எனக்கு வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிா் உரிமைத்தொகை கிடைக்காதவா்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். தகுதியுள்ள மகளிா்க்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்.
தெருவிளக்கு, பேருந்து நிறுத்தம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவா் பாலகுருசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.