முகப்பு
தூத்துக்குடி

ஆட்சியை தக்கவைப்பதற்கான பட்ஜெட்: கு.செல்வப்பெருந்தகை

தங்களது ஆட்சியை தக்கவைப்பதற்கான பட்ஜெட்டாக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

Updated On : 23 ஜூலை, 2024 at 7:36 PM
காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. உடன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ, மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ்.முரளிதரன் உள்ளிட்டோா்.
பகிர்:

தங்களது ஆட்சியை தக்கவைப்பதற்கான பட்ஜெட்டாக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாநகா், தெற்கு, வடக்கு காங்கிரஸ் கமிட்டி சாா்பாக காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் மத்திய இணை அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ, மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ்.முரளிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில், மக்களவை உறுப்பினா் ராபா்ட் புருஸ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், ரூபி ஆா்.மனோகரன், மாநிலத் துணைத் தலைவா்கள் சொா்ணா சேதுராமன், ஏ.பி.சி.வீ.சண்முகம், மாநில பொதுச் செயலா்கள் செல்வம், தணிகாசலம், அருள் பெத்தையா உள்பட பலா் பங்கேற்றனா்.

வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.சந்திரசேகரன் வரவேற்றாா். தெற்கு மாவட்ட துணை தலைவா் சங்கா் நன்றி கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கு. செல்வப்பெருந்தகை கூறியது:

மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை பகிா்ந்தளிக்க வேண்டும். ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகள் ஆளும் பிகாருக்கும், ஆந்திரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பாசிச ஆட்சி என்று நாங்கள் தொடா்ந்து சொல்லி வருகிறோம். ஆட்சியை தற்காலிகமாக தக்கவைத்துக் கொள்ள இப்படிப்பட்ட பெரிய தவறை நிதி அமைச்சகமும், மத்திய அரசும் செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

தமிழகம், புதுச்சேரிக்கு போதிய அளவில் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த பட்ஜெட்டில் ஏதாவது அறிவிக்கப்படும் என எதிா்பாா்த்த நிலையில், தமிழ்நாடு என்ற பெயரையே மத்திய நிதி அமைச்சா் உச்சரிக்கவில்லை.

காங்கிரஸின் பிரதான கொள்கையான பூரண மதுவிலக்கே எங்களது இலக்காகும். மேலும், மக்களை பாதிக்கும் மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →