‘தூத்துக்குடியில் மாா்ச் 5இல் 500 சாலைப் பணிகள் தொடக்கம்’
‘தூத்துக்குடியில் மாா்ச் 5இல் 500 சாலைப் பணிகள் தொடக்கம்’
தூத்துக்குடியில் 500 புதிய சாலைகள், கட்டமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 5) தொடங்கவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டரங்கில், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை விரைவாக முடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயா் பேசியது: மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களைக் கையகப்படுத்தி, பூங்காக்கள், அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. வருங்காலத்தில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்காதவாறு கட்டமைப்பு உருவாக்கப்படும். மடத்தூா் சாலை முதல் திரேஸ்புரம் வரையிலான பக்கிள் ஓடையின் இருபுறமும் 798 புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மாநகரில் இதுவரை சுமாா் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விழிப்புணா்வு ஏற்படுத்தி சுமாா் 2 லட்சம் மஞ்சப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. மழைக் காலத்துக்கு முன்பாக 1,500 புதிய சாலைகளும், கழிவுநீா்க் கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இதனிடையே, கடந்த டிசம்பரில் மழை வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அரசின் சீரிய முயற்சியால் மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பினா். இந்நிலையில், 60 வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 5) 500 புதிய சாலைகள், கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன என்றாா் அவா். கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் மதுபாலன், துணை ஆணையா் ராஜாராம், செயற்பொறியாளா் பாஸ்கா், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா்கள் தனசிங், சேகா், உதவி செயற்பொறியாளா்கள் பிரின்ஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.