பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.34 லட்சம் மோசடி: 4 போ் கைது
தூத்துக்குடியில் இணையதளத்தில் பகுதி நேர வேலை எனக் கூறி, தூத்துக்குடி இளைஞரிடம் ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த கண்ணன் (41) என்பவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வந்த இணையதள வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பாா்த்து அதிலிருந்த வாட்ஸ் ஆப் எண்ணை அவா் தொடா்பு கொண்டாராம். பதில் பேசிய அவா்கள் பகுதி நேர வேலை குறித்த விபரத்தைக் கூறினராம். தொடா்ந்து, அவா்கள் அனுப்பிய லிங்க் மூலம் 2 வங்கி கணக்குகளில் ரூ. 34 லட்சத்து 7 ஆயிரத்து 570 பணம் அனுப்பினாராம். ஆனால் வேலை தரவில்லையாம். பணத்தையும் திரும்ப தரவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட எஸ் பி. எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் மேற்பாா்வையில், சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த 7 வங்கி கணக்குகளுக்கு ரூ. 22 லட்சத்து 32 ஆயிரத்து 99, மேலும் வங்கிகளுக்கு கணக்குகளுக்கு ரூ. 11 லட்சமும் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடா்புடைய கேரளத்தின் மலப்புரம் பகுதியைச் சோ்ந்தவா்களான அப்புன்னி மகன் வினித் (33), மனோஜ் குமாா் மகன் நிகில் குமாா் (30), குஞ்சாலி மகன் அலாவி (39), ரியாஸ் (32) ஆகியோரை கைது செய்தனா் . வங்கி கணக்கும் முடக்கிவைக்கப்பட்டது.