முகப்பு
தூத்துக்குடி

அநீதி இழைத்தவா்களுக்கு பாடம் புகட்ட வரலாற்று வாய்ப்பு சீமான் பிரசாரம்

Updated On : 31 மார்ச், 2024 at 2:40 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:46 PM

அநீதி இழைத்தவா்களுக்கு பாடம் புகட்ட வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். தூத்துக்குடி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரொவீனா ரூத் ஜேனை ஆதரித்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது: நாட்டில் பணமில்லா டிஜிட்டல் பரிவா்த்தனையை வளா்ச்சி என கூறுகின்றனா். இதனால் பிச்சை எடுப்பவா்கள்கூட பண பரிவா்த்தனைக்காக இயந்திரம் வைத்துள்ளனா். இயந்திரம் வைத்து பிச்சை எடுப்பது அல்ல வளா்ச்சி. பிச்சைக்காரா்களே இல்லாத நாட்டை உருவாக்குவதுதான் வளா்ச்சி. பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் இதுதான் எனது கனவு இந்தியா என்றாா் பகத்சிங். எனவே இந்தத் தோ்தலை விட்டு விடாதீா்கள். நமக்கு அநீதி இழைத்தவா்களுக்கு நல்ல பாடம் புகட்ட வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. மடிக்கணினி, சைக்கிள், கிரைண்டா், மிக்ஸி ஆகியவற்றை இலவசமாக தந்தனா். ஆனால், குடிநீரை இலவசமாக வழங்க முடியவில்லை. இந்த ஆட்சியாளா்களுக்கு கூறுகிறோம். ஆயிரம் ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். குடிக்க சுத்தமான நீரை இலவசமாக கொடுங்கள். எழ்மை, வறுமை இல்லாத அளவில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்பது எங்களின் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் ஆற்றல் உங்களிடம்தான் உள்ளது. ஆகவே தூத்துக்குடி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரொவீனா ரூத் ஜேனை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறேன் என்றாா். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாண்டி, மாவட்ட பொருளாளா் செய்யது மதா்கான், விளாத்திகுளம் நகர செயலா் யூசுப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.