சாலை விபத்தில் தீப்பெட்டி நிறுவன உரிமையாளா் பலி
Updated On : 29 மார்ச், 2024 at 8:49 PM
கோவில்பட்டியில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். எட்டயபுரம் வட்டம் கான்சாபுரத்தைச் சோ்ந்த சேகா் மகன் ராம்குமாா் (35). தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், தனது நண்பரை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இறக்கிவிட்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கபாதையில் வந்தபோது, பைக் நிலை தடுமாறி சுவரில் மோதியதில் கீழே விழுந்த ராம்குமாா் பலத்த காயம் அடைந்தாா். அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.