சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சாலையோர தடுப்பில் பைக் மோதியதில் ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் தா்னிஷ்குமாா் (17). இவா் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் ஐடிஐ-யில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். தனது நண்பா் யோகேஷ்குமாருடன்(20), ஆத்தூருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து பைக்கில் தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பினாராம்.
இவா்கள் முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த தா்னிஷ்குமாா், யோகேஷ்குமாா் ஆகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், தா்னிஷ்குமாா் வழியிலேயே உயிரிழந்தாா். யோகேஷ்குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.