பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில், பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்ததாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவா், கடந்த 16ஆம் தேதி தனது மனைவியுடன் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் பைக்கில் வந்த இருவா், உதயகுமாரின் மனைவி வைத்திருந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.
புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி தபால்தந்தி காலனியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் மதன் (19), ஸ்டாலின் ஜோசப் மகன் ஸ்வீட்டன் ரிஜோ (20) ஆகிய இருவரும் உதயகுமாரின் மனைவியிடமும், தென்பாகம் காவல் எல்கைக்குள்பட்ட மேலும் ஒருவரிடமும் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, 2 கைப்பேசிகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.