போலி ஆவணம் மூலம் முந்திரி இறக்குமதி செய்து ரூ.5.4 கோடி மோசடி: மேற்கு ஆப்பிரிக்கா ஏற்றுமதியாளா் புகாா்
தூத்துக்குடி: கேரள மாநிலத்தைச் சோ்ந்த நிறுவனம் முறையாக பணம் செலுத்தாமல் முந்திரி கொட்டைகள் இறக்குமதி செய்து ரூ.5.4 கோடி மோசடியில் ஈடுபட்டதாக, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினி பிசாவு நாட்டைச் சோ்ந்த அா்மன்டோ சில்வா என்பவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு:
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினி பிசாவு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களது நிறுவனத்தை கேரளத்தைச் சோ்ந்த ஒரு நிறுவனம் தொடா்புகொண்டு முந்திரி கொட்டை இறக்குமதி செய்ய கேட்டுக்கொண்டது.
அதன்படி, அந்நிறுவனத்துக்கு, கடந்த 2023 டிசம்பா் மாதம் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு துறைமுகத்திற்கு 32 கண்டெய்னா்களில் 896 டன் முந்திரிகொட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முந்திரி கொட்டைகள் ஏற்றிவந்த கப்பல் கடந்த ஜனவரி 4ஆம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது. இதற்காக பணத்தை வங்கியில் கட்டிய பின்பு , முந்திரி கொட்டைகளை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல ஆவணம் அனுப்பப்படும்.
இதில், முந்திரி கொட்டைகளை இறக்குமதி செய்த நிறுவனம் 2 கண்டெய்னா்களுக்கு மட்டும் முறையாக பணத்தை வங்கியில் கட்டிவிட்டு, முறையான ஆவணங்களை காண்பித்து எடுத்துச் சென்றுள்ளனா். மேலும் 11 கண்டெய்னா்களுக்கு, 90 நாள்களுக்குள் பணத்தை கட்டி விடுவதாகக் கூறி, அதற்கான ஆவணங்களை பெற்று அதை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளாா்.
பின்னா், தூத்துக்குடி துறைமுகத்தில் மீதம் இருந்த 19 கண்டெய்னா்களை உரிய ஆவணம் இல்லாமல் , அதில் இருந்த சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளனா். இதனால், எங்கள் நிறுவனத்திற்கு ரூ.5 கோடியே 40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உரிய முறையில் பணம் கொடுக்காமல் மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.