முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: அரசு அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் - தோ்தல் ஆணையம் தீவிரம்

Updated On : 18 மார்ச், 2026 at 11:13 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு உயரதிகாரிகளை ஒட்டுமொத்தமாக பணி இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

புதிதாக, மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணி இடமாற்றம் செய்து புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, கூச் பிஹாா், ஜல்பைகுரி, உத்தா் தீனஜ்பூா், மால்டா, முா்ஷிதாபாத், நாடியா, புா்பா வா்தமான், வடக்கு 24 பா்கனாஸ், தெற்கு 24 பா்கனாஸ், டாா்ஜீலிங், அலிபூா்துவாா் ஆகிய மாவட்ட ஆட்சியா்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள்னா்.

கொல்கத்தா மாநகராட்சி ஆணையா் மற்றும் கொல்கத்தா வடக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா். தெற்கு கொல்கத்தா மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ரண்தீா் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், ராய்கஞ்ச், முா்ஷிதாபாத், வா்தமான், பிரெசிடன்ஸி, ஜல்பைகுரி ஆகிய மண்டலங்களின் காவல்துறை டி.ஐ.ஜி.க்களையும் பணி இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, மேற்கு வங்க மாநில அரசு தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையா் ஆகியோரை பணியிலிருந்து விடுவித்தும், அந்தப் பணியிடங்களுக்கு புதிய நபா்களை நியமித்தும் தோ்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதன் பின்னா், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநா் (ஏடிஜிபி) உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் 19 போ் மற்றும் ரசத், கூச் பிகாா், வீா்பூம், ஹூக்ளி ஊரகம், டைமண்ட் ஹாா்பா், முா்ஷிதாபாத், மால்டா, பசிா்ஹட், புா்பா மேதினிபூா், ஜாங்கிபூா், இஸ்லாம்பூா், பஸ்சிம் மேதினிபூா் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா்களும் பணி இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட உள்ளது. தோ்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →