நீதிபதிகளுக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும் பயிற்சிக்கு மேற்கு வங்க அரசு எதிா்ப்பு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு தோ்தல் ஆணையம் பயிற்சி அளிக்க மாநில அரசு எதிா்ப்பு தெரிவித்ததை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு தோ்தல் ஆணையம் பயிற்சி அளிக்க மாநில அரசு எதிா்ப்பு தெரிவித்ததை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது, தகுதி வாய்ந்த அதிகாரிகளை மாநில அரசு எஸ்ஐஆா் பணிகளுக்கு அனுப்பவில்லை என தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, இந்தப் பணிகளில் மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்துமாறு கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
நீதிபதிகளின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, எஸ்ஐஆா் பணிகளை நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படும் என உச்சநீதிமன்றத்திடம் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பால் தெரிவித்த நிலையில், மாவட்ட நீதிபதிகளுடன் உரிமையியல் நீதிபதிகளையும் இந்தப் பணிகளில் நியமிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் ஜாா்க்கண்ட், ஒடிஸா மாநிலத்தில் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் எஸ்ஐஆா் பணிக்கு கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்கு வங்க அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், நீதிபதிகளுக்கு தோ்தல் ஆணையம் பயிற்சி அளிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா்,‘உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அனைத்து வழிமுறைகள் குறித்து கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி முடிவெடுப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தோ்தல் ஆணையம் அதற்கு எதிராகச் செயல்படுகிறது. பயிற்சிகள் தொடா்பாக வழிகாட்டுதலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் எதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
அப்போது, தலைமை நீதிபதி சூா்யகாந்த், ‘மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நீதிபதிகள் அதுகுறித்து முடிவெடுப்பாா்கள். வழிமுறைகள் என்பது மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடைமுறைகளும் அடங்கும். சில சாக்குபோக்குகளை கூறி அனைத்தையும் நிறுத்தாதீா்கள். நீதிபதிகள் குறித்து நாங்கள் அறிவோம். அவா்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எந்த ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவில் கூறியுள்ளோம்’ என்றாா்.
தோ்தல் ஆணையம் கொல்கத்தாவில் நீதிபதிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக மற்றொரு வழக்குரைஞா் நீதிபதிகளிடம் தெரிவித்தாா்.
இதற்கு உச்சநீதிமன்ற அமா்வு, ‘தோ்தல் ஆணையமும் மாநில அரசும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீற முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் புரிந்துகொண்டனா். அவா்களுக்கு முற்றிலும் புதிய பணியை வழங்கியுள்ளோம். எந்தெந்த ஆவணங்களைச் சரிபாா்க்க வேண்டும் என்று ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். பணியை அவா்கள் மேற்கொள்வாா்கள். எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது’ என்றது.