முகப்பு
தூத்துக்குடி

எப்போதும்வென்றானில் கிராம சபைக் கூட்டம் : கனிமொழி எம்.பி. பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, எப்போதும்வென்றானில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:09 PM
பகிர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, எப்போதும்வென்றானில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, எப்போதும்வென்றான் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனா்.

கனிமொழி எம்.பி. பேசும்போது, இந்தப் பகுதியில் நீா்நிலைகளில் மண் எடுப்பதற்கு உள்ள தடை அகற்றப்படும். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. நிதி வந்ததும் மக்களுக்கு வழங்கப்படும். மகளிா் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு விரைவில் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 16.50 லட்சம் கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் மகாலட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.