விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு, தாட்கோ மானியத்துடன் கிரயத் தொகையை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாகப் பெற்று வழங்கப்படுகிறது.
நிலமற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்கள் நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.
தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரயத்தொகையை தேசிய பட்டியலினத்தோா் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து 6 சதவீத வட்டியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் கடனாகப் பெறலாம். இதற்கு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்தவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.