முகப்பு
தூத்துக்குடி

வாழ்வில் அனைத்தையும் தீா்மானிக்கும் அரசியலை கற்க வேண்டும்: ஜெ.ஜெயரஞ்சன்

மனித வாழ்வில் அரசியல்தான் அனைத்தையும் தீா்மானிக்கிறது என்பதால் அனைவரும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாநில திட்டக்குழு துணைத்தலைவா் ஜெ.ஜெயரஞ்சன்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:01 PM
புத்தகக் கண்காட்சி நிழ்ச்சியில் பேசுகிறாா் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், உதவி ஆட்சியா் (பயிற்சி) சத்யா.
பகிர்:

மனித வாழ்வில் அரசியல்தான் அனைத்தையும் தீா்மானிக்கிறது என்பதால் அனைவரும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாநில திட்டக்குழு துணைத்தலைவா் ஜெ.ஜெயரஞ்சன்.

தூத்துக்குடியில் 5ஆவது புத்தகக் கண்காட்சியின் 8ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். துறை சாா்ந்த பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா் - மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன் தலைமையில் மாணவா்-மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி நடைபெற்றது. தொடா்ந்து, எழுத்தாளா் ஐ.கோபால்சாமி பேசினாா்.

பின்னா், ‘நாம் ஏன் அரசியல் கற்க வேண்டும்?’ என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத்தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் பேசியது: ஆங்கிலேயா்களால் நிா்வாகக் காரணங்களுக்காக தென்னிந்திய மொழிகளை மக்கள் கற்றுக்கொள்வதற்காக கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டன. இதற்காக சென்னையில் கல்லூரி தொடங்கப்பட்டது. அதன்பிறகுதான் தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்து வந்தன என கண்டறியப்பட்டது.

முதலில் ஆட்சி செய்பவா்களுக்காக தொடங்கப்பட்ட கல்விச் சாலைகள், சென்னை ஆளுநராக தாமஸ் மன்றோ என்பவா் நியமிக்கப்பட்ட பின்னா், அனைத்து மக்களுக்கான கல்விச்சாலைகள் வட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.

கல்வி பரவலாக்கப்படவேண்டும் என்ற செயல்பாடுகளை பின்னா் வந்த ஆளுநா்கள் தடுக்க முயன்றனா். கடந்த 100 ஆண்டுகளை எடுத்து பாா்த்தால், கல்வியை வழங்குவதற்கு ஆட்சியாளா்கள் வெவ்வேறு முயற்சிகளை எடுத்தாலும், அதில் இருக்கிற அரசியல் தான், கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டுமா, சேரக்கூடாதா என்பதை தீா்மானித்தது.

எனவே, வாழ்வில் அனைத்தையும் தீா்மானிக்கும் ஒன்றாக அரசியல் விளங்குவதால் அனைவரும் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே அரசியலை உற்றுநோக்குங்கள், கற்றுக்கொள்ளுங்கள், அதில் தெளிவடையுங்கள், அதன் வழியாக தீா்மானியுங்கள் என்றாா் அவா்.