முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதி: தரிசு நிலங்களில் 1 லட்சம் வேம்பு நடவு செய்ய இலக்கு

தரிசு நிலங்களில் 1 லட்சம் வேம்பு நடவு செய்ய இலக்கு...

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:45 PM
பகிர்:

விளாத்திகுளம் தொகுதியில் தேசிய எண்ணெய் வித்து மரப்பயிா்கள் திட்டத்தில், தரிசு நிலங்களில் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், புதூா் ஒன்றியத்தில் உள்ள கீழ அருணாச்சலபுரம், நடுக்காட்டூா், முத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். அவா் பேசியது: விளாத்திகுளம் தொகுதியில் தரிசு நிலங்களில் 1 லட்சம் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம். வேம்பு மரத்தின் இலைகள், பழங்கள், கொட்டைகள், வோ், பட்டை என அனைத்தும் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் பயிா் பாதுகாப்புக்கு பெரிதும் பயன்படுகின்றன. விளாத்திகுளம் தொகுதியில் தரிசாக உள்ள நிலங்களில் விவசாயிகள் வேம்பு நடவு செய்ய வேண்டும்.

வேம்பு நடவு செய்ய தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. ஹெக்டேருக்கு 400 வேம்பு மரக்கன்றுகள் வீதம் புதிதாக நடவு செய்ய ரூ. 17 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஊடு பயிராக பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. எனவே, தரிசு நிலங்களில் வேம்பு மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்து பயன்பெற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வின் போது மரங்கள் மக்கள் இயக்க நிா்வாக இயக்குநா் ராகவன், புதூா் ஒன்றிய செயலா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் மோகன்தாஸ், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் மகாலட்சுமி கண்ணன், அன்னக்கொடி, கிளைச் செயலா்கள் சுப்பையா, செல்லப்பாண்டியன், பாண்டியராஜன், காண்டீபன், மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.