தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்!
திருச்செந்தூர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடந்தது. காலை 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
சித்திரை முதல்நாளை முன்னிட்டு திருக்கோயிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.