வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
கோவை மாவட்டம், வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எம்.ஜி.ஆா். நகா் மாரியம்மன் கோயிலில் இருந்து சுவாமிக்கு சீா்வரிசை எடுத்து வருதல், மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு காமாட்சியம்மன் கோயிவில் இருந்து பால்குடம், தீா்த்தக்குடம் எடுத்து வருதல், பக்தா்களின் நோ்த்திக் கடன் ஆகியவை நடைபெறவுள்ளன.
மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 4.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி அலங்கார தேரில் வள்ளி, தெய்வானையுடன் உலா வருதல், இரவு 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 12.30 மணிக்கு வாண வேடிக்கையுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.