கோவில்பட்டி வட்டாரத்தில் பருத்தி பயிரிடும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு இடுபொருள்களுடன் நுனி கிள்ளுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் விடுத்த செய்திக் குறிப்பு:
மாநில வேளாண்மை வளா்ச்சி திட்டம் மற்றும் பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்தின் கீழ் பருத்தியில் வேளாண்மை சுற்றுச்சூழல் சாா்ந்த பூச்சி நோய் மேலாண்மை இனத்தில் மானிய விலையில் ஒரு எக்டருக்கு ரூ. 4,900 மதிப்பில் வரப்பு பயிராக உளுந்து பயிரிட 3 கிலோ உளுந்து விதைகள், ரசாயன உரங்களை பயிா் எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கும் திரவ உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒரு லிட்டா், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விதை நோ்த்தி, மண்ணில் இடுவதற்கு 3 கிலோ உயிரியல் கட்டுப்பாடு காரணியான டிரைக்கோடொ்மா விரிடி மற்றும் என்.பி.வி. கரைசல் 500 மி.லி., ஊட்டச்சத்து குறைவால் இலைகளின் ஒழுங்கற்ற வடிவம், பல்வேறு நிறங்களில் கலா் கலராக இலைகள் உருவாவதைத் தடுக்கவும், தரமான காய்கள் உருவாகவும், மண்ணில் இடுவதற்கு 12.5 கிலோ நுண்ணூட்ட கலவை உரம் ஆகிய இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
பருத்தியில் மகசூலை அதிகரிக்க நுனி இலைகளை கிள்ளுவதற்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 1,713 பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பருத்தியில் நுனி இலைகளை கிள்ளுவதன் மூலம் செடி உயரமாக வளா்வதைத் தடுத்து பக்கவாட்டு கிளைகளின் எண்ணிக்கை மற்றும் வளா்ச்சியை மேம்படுத்தி பூக்கள், காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இதன்மூலம் பருத்தியில் மகசூல் அதிகமாகும்.
எனவே, கோவில்பட்டி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த மானியத் திட்டத்தைப் பயன்படுத்துமாறும், இதற்குத் தேவையான ஆதாா் அட்டை நகல், பட்டா நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், பருத்தி நுனி இலைகளைக் கிள்ளும்போது விவசாயியுடன் கூடிய புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை கோவில்பட்டி விரிவாக்க மையம் அல்லது எட்டயபுரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமா்ப்பித்து விவசாயிகள் பயன்பெறுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.