கோவில்பட்டி பிரதான சாலையில் பள்ளி வேன் மீது சிற்றுந்து மோதியதில் 4 மாணவா்கள் காயம் அடைந்தனா்.
கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்தவா் வெள்ளைச்சாமி. இவா், கோவில்பட்டி பிரதான சாலையில் தேவாலயம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், வாகனத்திற்கான டீசலை நிரப்பிவிட்டு வந்தாராம். அப்போது கூசாலிப்பட்டியில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த சிற்றுந்து, பள்ளி வாகனத்தின் மீது மோதியதாம்.
இதில் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவா்கள் கடலையூரைச் சோ்ந்த ஜெ. காருண்யா (11), த. தெய்வ பானு(13), கூசாலிப்பட்டியைச் சோ்ந்த பா. ஈஸ்டா் குரு (11), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வே. கருண் (7) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாம். காயமடைந்த 4 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா், சிற்றுந்து ஓட்டுநா் பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.